நெல்லையில் பட்டப்பகலில் வீடுகளில் கதவை உடைத்து பொறுமையாக பீரோ சாவியைத் தேடி நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் செயல், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம், களக்காடைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவர், களக்காடு நகர காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது வீட்டிற்குப் பின்புறமுள்ள மற்றொரு வீட்டில் செல்வராஜன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர், ஐஸ்கிரீம் வியாபாரி. ஜெபஸ்டின் ராஜ் மற்றும் செல்வராஜன் ஆகியோர் அருகிலுள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். மதியம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது அவரது வீடு உட்புறமாக தாழ்பாழ் போடப்பட்டிருந்தது.இதனையடுத்து ஜன்னல் வழியாக கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் பீரோ மற்றும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்க கம்மல், 2 சவரன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதேபோல செல்வராஜின் வீட்டிலும் உள்புறம் தாழ்பாழிடப்பட்டு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் பணம், இரண்டரை கிராம் தங்க கம்மல் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் களாக்காடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து பின்புற கதவை உடைத்து முன்பக்க கதவை லாவகமாக உள்தாழ்பாளிட்டு திருடியது தெரிய வந்தது.அத்துடன், இரண்டு வீடுகளிலும் பீரோவை உடைக்காமல் பொறுமையாக பீரோ சாவியைத் தேடி, சாவி மூலம் பீரோவைத் திறந்தே திருடியுள்ளனர். இரண்டு பேருக்கும் நன்கு அறிமுகமான மற்றும் அடிக்கடி இருவரின் வீட்டிற்கு வந்து செல்பவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பகலில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.