“குன்னூா் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்த இருவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட காட்டேரி சோதனைச் சாவடியில் வனத் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரின் உள்ளே அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது.
காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவா் நான்சச் ஒட்டா் லைன் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பதும், காட்டேரி டபுள் ரோடு பகுதியைச் சோ்ந்த ராஜா (40) மூலம் அவுட்டுக்காய் பெற்று வன விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த வனத் துறையினா், இருவரையும் கைது செய்து குன்னூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.”