மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே ஆனச்சாலில் யானை தந்தங்களை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மூணாறு அருகே ஆனச்சால் பகுதியை மையப்படுத்தி சிலர் யானை தந்தங்களை விற்க முயல்வதாக பள்ளிவாசல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரி அனில்குமார், சம்பந்தப்பட்டவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தந்தங்களை வாங்குவதாக நாடகமாடி விலை பேசினார்
அவரிடம் ரூ.40 ஆயிரம் என விலை கூறினர். தந்தங்களை விற்க முன் வந்தவர்களை வனத்துறையினர் ஆனச்சால் வரவழைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது மூணாறு அருகே போதமேடு பகுதியைச் சேர்ந்த டிஞ்சுகுட்டன் 29, மணி 36, எனவும், தந்தங்களை டிஞ்சுகுட்டன் என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் இருந்து தந்தத்தின் மூன்று துண்டுகளை பறிமுதல் செய்த நிலையில் தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி தலைமையில் வனக்காவலர்கள் இருவரையும் கைது செய்தனர்.
டிஞ்சுகுட்டன் வீட்டில் சிக்கிய தந்தங்கள் அவரது தாயாரிடம் ஒருவர் கொடுத்ததாக தெரியவந்தது. மேல்விசாரணை நடக்கிறது