கோமுகி அணையில் ரூ 5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அணையில் 3.6 சதுர கிலோ மீட்டர் பரப்ளவு நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. கல்வராயன் மலை பகுதியில் உள்ள 290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை நீர் முழுவதும் அங்கு உற்பத்தி ஆகும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி ஆகிய 3 ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் சேகரமாகிறது.
பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 12 அணை கட்டுகளின் மூலம் 43 ஏரிகள் நீராதாரம் பெறுகின்றன. மேலும் புதிய பாசன திட்டத்தில், அணையிலிருந்து 8 ஆயிரத்தி 917 மீட்டர் துாரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 11 ஆயிரம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் இக்கிராம மக்களின் குடி நீர் ஆதாரமாகவும் கோமுகி அணை உள்ளது.
கோமுகி அணையிலிருந்து ஆண்டு தோறும் அக்டோபர் 1 ம் தேதி முதல் பிப்ரவரி 28 ம் தேதி வரை 150 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர் மட்டம் 22 அடியை எட்டியதும் மீன் வளத்துறை சார்பில் அணையில் மீன் வளர்க்கப்பட்டு அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக டெண்டர் முறையில் மீனவர் சங்கம் சார்பில் அணையில் மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோமுகி அணையின் மீன் வளர்பிற்காக அணையின் குடியிறுப்பு வளாகத்தில் மீன் வளத்துறை அலுவலகம் மற்றும் மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தது.
காலப்போக்கில் கோமுகி அணையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பணிகள் கை விடப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததால் அப்போது அமைக்கப்பட்ட தொட்டிகள் சிதலமடைந்து அந்த இடம் முழுவதும் முட்புதர்களாக மாறியது.
இந்நிலையில் மீன்வளத்துறை சார்பில் பாழடைந்து கிடந்த மீன் வளர்ப்பு தொட்டிகளை அகற்றி விட்டு புதிதாக தொட்டிகள் அமைத்து மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணிகளை மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் ரூ 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக மீன் வளர்ப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதில் 10 நாற்றாங்கால் தொட்டிகள், மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டிகள், சிப்பம் கட்டும் அறை, மேல் நிலை நீர் தேக்க தொட்டி, சுற்று சுவர் மற்றும் உட்புற சாலை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கும் விவாயிகளுக்கு மானிய விலையில் மீன் குஞ்சுகள் வழங்கபட உள்ளது. மானிய விலையில் மீன் குஞ்சுகள் கிடைப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கோமுகி அணையில் கைவிடப்பட்ட மீன் குஞ்சு உற்பத்தி பணிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ளது விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.