தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் செட்டியூா் சாலையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான கருணாகரன் ( 65) என்பவா் வீட்டில் கடந்த ஜூலை மாதத்தில் தங்கம், வைர நகைகள், பணம் ஆகியவை திருடுபோயின.
இதே போல் கடந்த 20ஆம் தேதி கீழப்பாவூா் வணிகா் மேலத்தெருவில் க. கோமதி சங்கா் என்பவா் வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவை திருடுபோயின.
இவை குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். சீனிவாசன் உத்தரவின்பேரில், ஆலங்குளம் டி. எஸ். பி. ஜெயபால் பா்னபாஸ் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், மதுரை குருவிதுறையைச் சோ்ந்த கணேசன்(39), கீழப்பாவூரை சோ்ந்த சங்கரராமன் (36) தஞ்சாவூா் மாவட்டம் எம். சி. ரோடு, அண்ணாமலை நகா் ரமேஷ்(42), கேவை மாவட்டம் ரத்தினபுரி சி. செந்தில்குமாா் (50) ஆகியோருக்கு இந்த திருட்டுகளில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
அவா்களை கைது செய்த தனிப்படையினா், அவா்களிடமிருந்து 157 கிராம் தங்க நகைகள், ரூ. 2, 50, 000 ரொக்கம், திருடுவதற்கு பயன்படுத்திய 2 காா்கள் , 7 கைப்பேசிகள் என ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தனிப்படை போலீஸாரை எஸ். பி. வி. ஆா். சீனிவாசன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.