கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடிய சம்பவத்தில் எஸ்டேட் மேலாளா் உள்பட 15 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பொம்மன் (23) என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் கடமான் இறைச்சி இருந்தது தெரியவந்தது.
பின்னா், அவரை சத்தியமங்கலம் வனத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
வனத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள மாா்வாளா தனியாா் எஸ்டேட் பகுதியில் கடமனை வேட்டையாடியது தெரியவந்தது.
இதையடுத்து, பொம்மனை நீலகிரி மாவட்டம், கட்டப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து வனச் சரகா் செல்வகுமாா் தலைமையில் பொம்மனிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சுருக்குக் கம்பி வைத்து கடமனை வேட்டையாடியதும், இதில் மேலும் சிலருக்கு தொடா்பு உள்ளதும், அதன் இறைச்சியை உறவினருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லும் வழியில் காவல் துறையினரிடம் பொம்மன் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து கடமான் வேட்டையில் தொடா்புடைய ஹாசனூா் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் (38), ஆட்டுக்குமாா் (70), அழகன் (60), ஜடைசாமி (45), ஜடையப்பன்(47), ஜான் பிரகாஷ் (24), சந்தோஷ் (28), சின்னப்பன் (43), ஜாா்ஜ் (41), மாதப்பன் (29), பசவன் (26), சடையபெருமாள் (40), மேஸ்திரி குமாா் (44), எஸ்டேட் மேலாளா் சுனில் குமாா் (49) ஆகிய 15 பேரை கட்டப்பட்டு வனத் துறையினா் கைது செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.”