திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள வணிக வளாகங்கள் , வீடுகள் , கடைகளில் இருந்து பெறப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்த 19 திடக்கழிவு மேலாண்மை வளாகங்கள் ஏற்படுத்த நிதி பெறப்பட்டு பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகி விட்டது .
இவற்றை முறையாக செயல்படுத்த குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு என ஒப்பந்தம் விடப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் ஒப்பந்தகாரர் வாகனங்கள் மூலம் தரம் பிரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு என அனைத்து வகை வரிகளுடன் சேர்த்து குப்பை சேகரிப்புக்கும் வரி வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் மொத்தம் உள்ள 19 திடக்கழிவு மேலாண்மை வளாகங்களில் 9 மட்டுமே செயல்பாட்டுக்கு வந்த நிலையில் 5 பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்துவிட்டதாகவும் தற்போது 4 மட்டுமே முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மீதமுள்ள 10 வளாகங்களும் இதுவரை பயன்படுத்தப்படாமலேயே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது .
இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியில் வாங்கப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களும் மிக மோசமான நிலையில் உள்ளன என்றும் இவற்றை பார்வையிட உயர்மட்ட குழுவினரை நன்றாக இயங்கும் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தை மட்டும் காட்டி ஆய்வை முடித்து வைத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக ரோட்டில் துணை சிறைச்சாலை வளாகத்திற்கு பின்புறம் உள்ள திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான ஒரே இடத்தில் மட்டும் 3 திடக்கழிவு மேலாண்மை வளாகங்கள் அமைத்து மூன்றுமே செயல்பாட்டில் இல்லாமல் உள்ளன என்றும் தரமற்ற இயந்திரங்களை பொருத்தி அதையும் உரிய பராமரிப்பு செய்யாமல் வைத்துள்ளதால் அவை அனைத்தும் இந்நேரம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது . மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் படி இந்த வளாகங்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அதிக தூரம் குப்பைகளை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் மாசு குறையும் என்பதாலேயே இது போன்ற விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் எதற்காக இப்படி ஒரே இடத்தில் மூன்று வளாகங்கள் அமைக்கப்பட்டது என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தூய்மை இந்தியா திட்ட மூலதனத்தில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் அய்யன் குளத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அப்பகுதியில் பன்றிகள் வாழும் இடமாக மாறிவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் . பயன்பாட்டில் இல்லாத இந்த வளாகத்தை சுற்றி திறந்த வெளியில் பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மலை போல குவித்து வைத்துள்ளதால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் என்றும் அய்யன் குளம் முழுவதும் மாசடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் 19 திடக்கழிவு மேலாண்மை வளாகம் அனைத்தையும் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் (மாசு கட்டுபாட்டு வாரியம் , சுற்றுச் சூழல் கண்காணிப்பு ஆணையம் உட்பட ) உடனடி தணிக்கை ஒன்றை நடத்தினால் இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு தொடர்பான திண்டுக்கல் மாநகராட்சியின் அலட்சியப் போக்கு வெளிச்சத்திற்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் .