கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், இது சம்பந்தமாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரியுள்ளார்.
மாடு காணாமல் போனது தொடர்பாக மாட்டை திருடியவர்கள், திருடி சென்ற வாகனம் உள்பட அனைத்தையும் அடையாளம் காட்டியும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே விவசாயின் குற்றச்சாட்டு.
இந்த திருட்டு சம்பவம் தெடர்பாக திண்டுக்கல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக விவசாயி மற்றும் அவருடைய மகனை அழைத்துள்ளனர்.
விசாரணையில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் ஆரம்பத்திலிருந்தே புகார் கொடுத்தவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பேசியதோடு, விவசாயின் மகனை சக காவலர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.
போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவர் இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உடனடியாக காவல் ஆய்வாளர் சந்திரமோகனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புகார் கொடுத்தவர்களை தாக்கிய சக காவலர்களில் ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பாக நடந்துவரும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, விசாரணைக்கு உட்படுத்தாமல், பணியிட மாற்றம் செய்தது ஏற்கத்தக்கதல்ல என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.