சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல மதுபான விடுதி செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து மது அருந்தினர். அப்போது போதையில் இளம்பெண்கள் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு எழுந்தது.மோதலில் ஈடுபட்ட பெண்களை தடுக்க முயன்றவர்களையும் மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.
சென்னையில் மதுபான விடுதிகள், பப்கள், ஏராளமான உள்ளன. கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான விடுதி இயங்கி வருகிறது. இந்த மதுபான விடுதிக்கு கடந்த செப்டம்பர் 8ம் இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து மது அருந்தியுள்ளார்கள். பின்னர் அவர்கள், மதுபான விடுதியில் இருந்து அங்குள்ள வாகனங்கள் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு போதையில் சென்றுள்ளார்கள்.
அப்போது அங்கு ஏற்கனவே மது போதையில் 2 இளம்பெண்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இருதரப்பு பெண்களுக்கும் இடையே காரை எடுக்கும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியதாம். ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்து கட்டிப்புரண்டு சண்டை போட்டார்களாம். அங்கு மது போதையில் மோதலில் ஈடுபட்ட பெண்களை பார்த்த பணியில் இருந்த ஊழியர்கள், ஓடிச்சென்று தடுக்க சென்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் கெட்ட வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றார்களாம். மது போதையில் இளம்பெண்கள் செய்த அட்டகாசத்தை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பார் ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் போதையில் ரகளை செய்த 4 பெண்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். மேலும் மது போதையில் தள்ளாடியபடி இருந்த 2 இளம்பெண்கள், சாதாரண உடையில் வந்த பெண் போலீசிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்
இதையடுத்து போதையில் வாக்குவாதம் செய்த 2 இளம்பெண்களை, பெண் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மதுபான விடுதியில் மதுபோதையில் இருதரப்பு இளம்பெண்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் கோயம்பேடு பாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.