உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். நேற்று(செப் 11) காலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா மேட்டாத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் தொடர்ந்து வந்த தனியார் சொகுசு பஸ், லாரியின் பின்னால் மோதியது. பஸ் மோதிய வேகத்தில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் மீது ஏரி எதிர் திசை சாலையில் சென்றது.
அப்போது மதுரயில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் மீதும், பின்னால் தொடர்ந்து வந்த ஈச்சர் லாரி மீதும் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் தனியார் சொகுசு பஸ் தேசிய நெடுஞ்சாலையின் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ஈச்சர் லாரி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது.
இந்த விபத்துகளில் 5 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.