கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிக்கு அருகில் யானை தந்தங்கள் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
செப்டம்பர் 26 அன்றைய தினம் யானை தந்தங்கள் விற்க முயற்சி நடப்பதாக தமிழ்நாடு வனத்துறையின் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, சுமதி (55), ஆஸாத் அலி (45), நஞ்சப்பன் (47), சந்தோஷ் பாபு (42), கோவிந்தராஜுலு (65) ஆகிய ஐந்து பேர் டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் குடோனின் உள்பகுதியில் அமர்ந்து தந்தத்தை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததை பார்த்த வனத்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.
விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் இரண்டும் செந்தில் வேலன் (62) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து அவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர் .