பழனி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி உலா வரும் கிரிவல வீதியில் எந்த வ ஆக்கிரமிப்பு , வாகன போக்குவரத்தும் இருக்க கூடாது என சமீபத்தில் மாண்புமிகு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்தினை தடை செய்யும் பொருட்டு அனைத்து இணைப்பு வழிகளிலும் நிரந்தர தடுப்புகள் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது .
இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் பழனி மேற்கு கிரிவல வீதி மின் இழுவை ரயில் நிலையம் அருகே காவல் துறை , வருவாய்துறை உட்பட பத்துக்கும் மேற்பட அரசு வாகனங்கள் மற்றும் தனி நபர் வாகனங்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன . இந்த அரசு வாகனங்கள் கிரிவல பாதையில் வருவதற்கு வசதியாக தடுப்புகளை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
எந்த வாகனங்களும் பழனி கிரி வீதியில் செல்லக்கூடாது என்பது நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில் அரசு வாகனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வாகனங்களுக்கு என மட்டும் இதில் விதிவிலக்கு உள்ளதா என்பதை சம்பந்தபட்ட துறையினர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்த வாகனங்களை கிரிவல வீதிக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு பேட்டரி வாகனத்தில் செல்லலாமே என்றும் சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும் தானா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .