நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள நம்பிக்குன்னு, கூவக்கொல்லி, மண்டாக்கரை, புளியாளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அப்பகுதிகளில் தங்களுடைய பட்டா நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனா். இவா்கள் கடந்த 2008-ஆம் ஆண்டு வனப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனா். இந்த மலைக்கிராம மக்களின் நிலத்துக்கு ஈடாக வேறு பகுதியில் மாற்று நிலம் வழங்கவேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து அவா்களுக்கு பந்தலூா் வட்டத்திலுள்ள சன்னக்கொல்லி பகுதியில் மாற்றிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் மாற்று இடம் பெற மறுத்தவா்களுக்கு நிலத்துக்கு பதிலாக அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாற்று இடம் வழங்கியதிலும், நிலத்துக்கு பதிலாக பணம் வழங்கியதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக மலைக்கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதனடிப்படையில் குற்றத் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. பாஸ்கரன், கூடலூா் டி.எஸ்.பி. வசந்தகுமாா், மசினகுடி ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோா்
முதுகுளி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணையின்போது தங்களை ஏமாற்றி முறைகேடு செய்துள்ளதாக மலைக்கிராம மக்கள 37 போ் புகாா் தெரிவித்துள்ளனா்.