திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு, வடக்கு, கீழ்க்கொடுங்காலூர், தேசூர், பொன்னூர் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், வந்தவாசி நகரில் ஐந்து கண் பாலம் அருகில் மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(35) என்பவரை வந்தவாசி தெற்கு போலீஸார் கைது செய்தனர். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராம ஏரிக்கரையில் மது விற்றதாக வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார்(43), ஆனந்தன்(38) ஆகியோரை வந்தவாசி வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
இரும்பேடு கிராம குளக்கரையில் மது விற்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(51), மங்கலம் மாமண்டூர் கூட்டுச் சாலையில் மது விற்காக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(42), கொட்டை கிராம காரியமேடை அருகே மது விற்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து(52) ஆகியோரை கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் கைது செய்தனர்.
பொன்னூர் கிராம முள்புதரில் மது விற்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜிபாபு(42) என்பவரை பொன்னூர் போலீஸார் கைது செய்தனர். சின்ன கோழிப்புலியூர் மதுக்கடை அருகே மது விற்றதாக வந்தவாசியைச் சேர்ந்த பிரபு(36) என்பவரை தேசூர் போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து மொத்தம் 90 மதுப்புட்டிகள், ரூ. 310 பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.