சமீபத்தில், கோவைக்கு ஆய்வுப் பயணம் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தடைகளைத் தகர்த்து கம் பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனப் புகழாரம் சூட்டியது தமிழக அரசியலில் பேசுபொருளானது.
அரசு வேலை வாங்கி தருவதாகச் சொல்லி முறைகேடு புகாரில் சிக்கியவரை முதல்வரே இப்படி பாராட்டினால் முதல்வருக்குக் கீழே செயல்படும் காவல்துறை முறைகேடு புகாரை எப்படிச் சுதந்திரமாக நியாயமாக விசாரிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அந்தச் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அடுத்த ஊழல் புகார் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது!
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக்கும் மின்சாரத்துறைக்கும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி. 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 28,300 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ய ஏழு வெவ்வேறு டெண்டர்களை வெளியிட்டது தமிழக அரசு.
சுமார் 1,068 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த டெண்டர்களில் 397 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் பொறுப்பு என்று குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அறப்போர் இயக்கம்.
அ.தி.மு.க., பா.ம.க கட்சிகளும் இந்த ஊழல் புகாரை எடுத்துப் பேச ஆரம்பித்திருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சிக்கல் கூடிக்கொண்டே போகிறது.