பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிம வளங்கள் தங்கு தடையின்றி கேரளா மாநிலத்திற்கு செல்கிறது. உண்ண உணவு முதல் உடுத்த உடை வரை தினமும் தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது.
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக தளவாடப் பொருட்களை (எம்.சாண்ட்) ஏற்றி சென்ற 2 லாரிகள் வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அனுமதி மறுத்ததால் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவில், மத்திய மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு துணையாக மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையில் துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.
கண்காணிப்பு குழு ஆண்டுக்கு ஒரு முறையும், துணை கண்காணிப்பு குழு மாதம் ஒரு முறையும் அணைப்பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் சென்றதால் கண்காணிப்பு குழுவும், துணை கண்காணிப்பு குழுவும் சமீபத்தில் கலைக்கப்பட்டது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை தடை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் கேரள வனத்துறையும், போலீசாரும் தடுத்து நிறுத்தி அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். இறுதியாக நடந்த மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வில் இப் பிரச்னையை முன்வைத்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
2024 மே மாதத்தில் தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக நீர்வளத் துறையினர் கடிதம் அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. இதனால் கடந்த 7 மாதங்களாக அணையில் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
தடுத்து நிறுத்தம்
இந்நிலையில் நேற்று மாலை தமிழக நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் உதவி பொறியாளர்கள் அணைப்பகுதிக்கு 2 லாரிகளில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக தலா 2 யூனிட் விதம் எம் சாண்ட் கொண்டு சென்றனர். வண்டிப்பெரியாறு அருகே உள்ள வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் அணைக்கு செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
தளவாடப் பொருட்கள் கொண்டு செல்வது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் கேரள வனத்துறையினர் லாரிகளை அனுமதிக்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அதிகாரிகள் கூறும்போது:
அணைப்பகுதியில் 17 பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியுள்ளது. முதற்கட்டமாக 5 பணிகள் செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என நவ.4, நவ.21 ல் கேரள வனத்துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்து விட்டோம். இருந்தபோதிலும் வள்ளக்கடவு சோதனை சாவடியில் ரேஞ்சர் அனுமதி மறுத்துள்ளார்.
இதனால் லாரிகள் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.