அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோயிஸ் விவசாயி. இவர் தனது விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்க, தாம்சனப்பள்ளி உள்ள துணை மின் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது அவரிடம் அங்கு பணியாற்றும் போர்மேன் அலி என்பவர் விவசாய மின் இணைப்பு வழங்க ரூ 30 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மோயிஸ், என்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது. ரூ.10 ஆயிரம் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் பணம் கேட்டு அலி நச்சரித்து வந்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மோயிஸ் இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து அதை மின் ஊழியர்களிடம் கொடுக்குமாறு கூறினர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் மற்றும் துணை காவல் ஆய்வாளர் விஜயகுமார் , தலைமை காவலர் மஞ்சுநாத் , காவலர்கள் ஸ்ரீதர் , ரவி தலைமையில் அஞ்செட்டி சென்றனர்.
தாம்சனபள்ளி அருகே மோயிஸ், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரம் நோட்டுகளை போர் மேன் அலியிடம் அளிக்க வந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக மின் ஊழியர் அலியை பிடித்து கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.