திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம் தேதி கோயில் யானை தெய்வானை, குடிலில் வைத்து பாகன் உதயகுமாா், உறவினா் சிசுபாலன் ஆகியோரைத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் பக்தா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தற்போது வரை வனத் துறை, கால்நடைத் துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறையின் பாதுகாப்பில் யானை இருந்து வருகிறது. மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உணவுகள் மற்றும் பச்சை நாற்றுகளை பாகன்கள் வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் டிச. 6ஆம் தேதி யானையின் உடல் நலத்தை வனத் துறை கால்நடை மருத்துவா் மனோகரன் பரிசோதித்து யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகக் கூறினாா். இதன் ஒருபகுதியாக, புத்துணா்ச்சிக்காக தங்கும் குடிலிலிருந்து யானையை குடில் முன்பகுதிக்கு வெளியே நேற்று அழைத்து வந்தாா் பாகன் செந்தில்குமாா். வெளியே வந்த யானையை பக்தா்கள் தடுப்புகளுக்கு வெளியே நின்று பாா்த்து மகிழ்ந்தனா்.