கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் , நசரேத் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது .
இதனை தொடர்ந்து நசரேத் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த முடிவு செய்து வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கி நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது .
இது தொடர்பான செய்தியும் வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் தாங்கள் உணவளித்து வந்த தெருநாய்களை பேரூராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பிடித்து அப்புறப்படுத்தியது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் விசாரித்த போது எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் காவல்துறையில் வேண்டுமானால் புகார் அளித்து காணாமல் போன தெருநாய்களை கண்டுபடித்துகொள்ளுங்கள் என கூறியதாகவும் கூறப்படுகிறது .
பிடிக்கப்பட்டதாக கூறப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களின் நிலை என்ன என்றும் ஒருவேலை பிடிபட்ட தெருநாய்கள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் , காவல் துறை கண்காணிப்பாளர் , தலைமை செயலாளர் , காவல் துறை தலைவர் மற்றும் விலங்குகள் நல்வாரியத்தில் நசரேத் பேரூராட்சியின் செயல் அலுவலர் திருமலை குமார் , தலைவி – நிர்மலா ரவி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளனர் .