
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்டது அகஸ்தியர்புரம் . இங்கு உள்ள குன்றின் மீது பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது . முக்கிய விசேஷ தினங்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த பகுதி முழுவதும் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது . இங்கு சுமார் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அடுத்தபடியான முக்கிய சுற்றுலா தலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அரிதிலும் அரிதான பல்வேறு மூலிகைகள் உட்பட சிறுமலை மலை பகுதி முழுவதிலும் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிறுமலை சமீபத்தில் ஆக்கிரமிப்பு , இளைஞர் இளம்பெண்களுடன் வருவது , இரவு நேர சிறப்பு விருந்துகள் நடத்தும் காட்டேஜ்கள் மற்றும் தங்கும் அறைகள் , தங்கு தடையற்ற எந்தவித கண்காணிப்புகளும் இல்லாத நிலை போன்றவற்றால் சீரழித்து வருகிறது .

தடை செய்யப்பட்ட பலித்தீன் பொருட்கள் பயன்பாடு , கள்ள சந்தை மதுபான விற்பனை என இருந்த நிலை மாறி தற்போது கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அகஸ்தியர் புரத்தை சேர்ந்த சிறுவன் கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் தோட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகிறார் ( காதல் பிரச்சனையில் தற்கொலை முயற்சி என வழக்கை முடித்துவிட்டது தனி கதை ).

இது குறித்து விசாரித்த போது அகஸ்தியர்புரத்திலேயே கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் இருப்பதாகவும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதில் இருந்தும் கஞ்சா குடிக்கும் நபர்கள் ( 18 வயது நிரம்பாத சிறுவர்கள் உட்பட ) இங்கு வந்து தான் கஞ்சா வாங்கி செல்வதாகவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் தான் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஜான் ஷாபு (வயது – 60) டெட்டனேட்டர் வெடித்து இறந்த நிலையில் கிடந்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் தீவிரவாத தடுப்பு படை உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தினர் .

இவ்வளவு நடந்தும் சம்மந்தபட்ட வனத்துறைனர் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் .
மேலும் சிறுமலைக்கு செல்லும் வழிகளை முறைபடுத்தி இல்லாத இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் கூடுதல் பணியாளர்களை வனத்துறையினர் நியமித்திடவும் காவல் துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து அனைத்து வாகனங்கள் மற்றும் சந்தேகப்படும் நபர்களையும் முழு தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.