
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் தான் இந்த கூத்து
திண்டுக்கல் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலை மலைபகுதி அதன் இயற்கை தன்மை மற்றும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலையால் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

file picture
இங்கு இருக்கும் நிலப்பகுதியில் பெரும் பகுதி காடுகள் என வகைப்படுத்தப்பட்ட நிலப்பகுதியாகவும் , அரசு புறம்போக்கு நிலமாகவும் , பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் உள்ளது . பட்டா நிலம் மிக்குறைந்த அளவிலேயே உள்ளது .

பல தலைமுறைகளாக ஆக்கிரமிப்பாளராக இருந்து விவசாயம் செய்து வந்த பல குடும்பங்கள் தற்போது வாழ்வாதார மாற்றத்தின் விளைவாக இந்த பகுதிகளில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போது ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
பட்டா நிலங்களை வாங்க வரும் வெளிநபர்களுக்கு ஆக்கிரமிப்பு நிலத்துடன் விலை பேசி விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது புற்றீசல் போல் முளைத்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் மற்றும் இவர்களுக்கு விற்பனை செய்து தர உள்ளூர் புரோக்கர்கள் ஆகியோர் வனத்துறையினர் , வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புடன் கை கோர்த்து அரசு புறம்போக்கு மற்றும் வன நிலங்களை ஏக்கர் ஐந்து லட்சம் முதல் விற்பனையை துவக்கி உள்ளனர் . இதற்காக அரசு வருவாய்துறை ஆவணமான ஆ பதிவேடு முதற்கொண்டு கையில் வைத்துக் கொண்டு புரோக்கர்கள் வலம் வருகின்றனர்.

இது போன்று ஆக்கிரமிப்பு நிலங்களை வாங்கும் நபர்கள் அவற்றில் உள்ள மரங்களை வெட்டி வேலி அமைப்பது , டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை பயன்படுத்தி கிணறு தோண்டுவது வனப்பகுதிகளில் பாதை அமைப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகள் தினமும் நடைபெற்று வருகிறது .

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கிராம நிர்வாக அதிகாரி , வனத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

இத்தனைக்கும் இந்த மலை பகுதி பாதுகாக்கப்பட்ட மலை பகுதிகள் பட்டியலில் உள்ளது . மேலும் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி இந்த சிறுமலை பகுதிகளில் புதிய பணிகள் எதுவும் செய்ய முடியாது எனவும் அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் மாநில அளவிலான மலைபகுதிகள் பாதுகாப்புக்கான கமிட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது .

சமீப காலமாக (அதுவும் குறிப்பாக சிறுமலை வனச்சரகர் மதிவாணன் பொறுப்பேற்றதற்கு பின்னர் ) பல்வேறு புதிய நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வேலிகள் அமைத்து வன உயிரின நடமாட்டத்தை முற்றிலும் தடுத்துள்ளனர் . இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சிறுமலை பிரிவு ( வனவர் தலைமையில் உள்ள ) வன ஊழியர்கள் என்ன செய்து வருகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கடந்த கோவிட் நோய் பரவல் காலத்திற்கு பிறகு மட்டும் சுமார் 500 -க்கும் மேற்பட்ட சட்ட விதி மீறல் கட்டிடங்கள் சிறுமலையில் கட்டப்பட்டுள்ளன . DFO ராஜ்குமார் IFS வந்தற்கு பிறகு சட்டவிதிமீறல் கும்பல் கொண்டாட்டத்தின் உச்சியில் உள்ளனர் அந்த அளவிற்கு எந்த வித ஆய்வு பணியோ நடவடிக்கைகளோ எடுக்காமல் எனக்கு எதுவும் தெரியாது என ஒருவரி பதில் கூறிவிட்டு நழுவி விடுவாராம் .

மேலும் சிறுமலை பல்லுயிர் பூங்கா பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று இன்னும் முடியாமல் மேலும் நிதி கேட்டுள்ளதாகவும் ஆனால் உடனடியாக திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாகவும் தகவல் .
சிறுமலை சோதனை சாவடியில் பணியில் இருக்கும் ஒரு வன ஊழியர் மட்டும் கொடைரோடு வனப்பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டியுள்ளதாகவும் மேலும் பலர் சொந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வனப்பாதுகாவலர் காஞ்சனா IFS அவர்களின் கீழ் இயங்கும் வனப்பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் புகார்கள் அல்லது இரசிய தகவல்களை முன்னரே தெரிவித்து விட்டு நடவடிக்கைக்கு செல்வதாகவும் தகவல் அளிக்கும் நபர்களையும் அவர்களுக்கு தகவல் கொடுக்கும் உள்ளூர் நபர்களையும் கண்டறிந்து பல்வேறு வகைகளில் குடைச்சல் கொடுத்து அவர்களை வனம் தொடர்பாக எந்த விசயத்திற்கும் வராத அளவிற்கு செய்வதையே தலையாய பணியாக வனப்பாதுகாப்பு படை செய்து வருவதாக வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

இது போன்று திண்டுக்கல் வனத்துறை தலைமையிடத்தின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் என்றும் ஒன்றில் கூட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் திண்டுக்கல் வனத்துறையின் நேர்மையான சில ஊழியர்கள் வெளிப்படையாக புலம்பி வருகின்றனர் .