
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும் ஒரு புரட்சித் திட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் திட்டம் நன்றாக இருந்து என்ன புண்ணியம். அதை சிறப்பாக செயல்படுத்தவேண்டுமே.. அங்கே தான் நாம் கோட்டை விடுகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் 39000 கோடி நிதி பெற்றிருக்கிறது. இதில் 60% கூலியாக கொடுக்கப்படுகிறது. மீதம் உள்ள 40% வேலைக்கான மூலப் பொருட்கள் செலவு.
4 வருடங்களில் 39000 கோடி என்றால், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எத்தனை ஆயிரம் கோடி பணம் வந்திருக்கும். அனேகமாக லட்சம் கோடிக்கு மேல் தமிழகம் மட்டுமே பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பை உறுதி செய்வது. அதன் மூலம் பண்ணைக்குட்டை அமைத்தல், நில மேம்பாட்டுப் பணிகள், நிலத்தை சமன் செய்தல், கல் வரப்பு/மண்வரப்பு அமைத்தல், தனிநபர் நிலங்களில் பழம்தரும் மரங்கள் நடுதல், நாடப்(NADEP) உரக்குழி, வெங்காயக் கொட்டகை, அசோலா சாகுபடி அலகு, தோட்டக்கலைத் தோட்டம், தனிநபர் கிணறு, மாடு/ஆடு/கோழி கொட்டகை அமைத்தல் போன்ற பிற தனிநபர்/விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டம் ஆரம்பித்து 20 வருடங்களை கடந்து விட்டது.
இத்தனை வருடங்களில் இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப் பட்டிருந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீரைச் சேமிக்கும் தரத்திற்கு உயர்த்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன?
இத்தனை ஆயிரம் கோடிகளை கொட்டி மக்களை சோம்பேறி யாக்கியது தான் ஆட்சியாளர்களின் வெற்றி. அதன் மூலம் அவர்கள் அடிக்கும் கொள்ளையில் மக்களையும் பங்குதாரர்களாக்கியது தான் அதிகாரிகளின், அரசியல் வாதிகளின் சாதனை.
நம் கண் முன்னே பல ஆயிரம் கோடிகள் வீணாகியிருக்கின்றன.
100 நாள் வேலைத்திட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த, தமிழக அரசு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குகிறது. பொதுப்பணித்துறை அந்த வேலைகளை செய்கிறது.
அதற்கும் மேலே பல தன்னார்வலர் கள், தொண்டு நிறுவனங்கள் நீர்நிலை மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. தனியார் பங்களிப்புடன் எத்தனையோ பணிகள் இன்றும் நடந்து வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் நீர்நிலைகளை மீட்டெடுத்து, அதற்கு உயிர் கொடுக்கும் பணியைச் செய்து வரும் தன்னார்வலர் திரு நிமல் ராகவனை தமிழக முதல்வரே பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் கூட தமிழக அரசு முன்னெடுத்துள்ள பணிகளை குறிப்பிட்டுள்ளார். 2400 ஏரிகளை தூர்வாரியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அரசே இத்தனை ஆயிரம் கோடிகளையும், மனித உழைப்பையும் கொட்டிய பிறகும், தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேலான நீர்நிலைகள் மோசமான நிலையில் தான் இருக்கின்றன. பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, முறையாக தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டால், தமிழகத்தின் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
நீர்நிலைகளில் மழை நீர் சேமிக்கப்பட்டால், நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும், மக்களுக்கு எப்போதும் வேலை இருக்கும். கிராமப்புற பொருளாதாரம் உயரும். நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது தவிர்க்கப்படும்.
ஆனால் இங்கே உள்ள அரசாங்கங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இது எதுவுமே நடக்காமல் பார்த்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
மக்களை எப்போதும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பதைத் தான் இந்த கட்சிகள் விரும்புகின்றன. அதனால் எவ்வளவு நல்ல திட்டங்களாக இருந்தாலும் அதை சிதைத்து அதன் நோக்கத்தை நிறைவேறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.