கோக்கு மாக்கு
Trending

கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்கு உட்பட்டது வெள்ளகவி மலைகிராமம் . இது ஆங்கிலேயர் கால (சுமார் 400 ஆண்டுகள் பழமையான மலை கிராமம் ) தொடர்புடைய மிகவும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த கிராமம் . இங்கு சுமார் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளை பெற்ற தருவதற்காக வடுகபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை தலைவராக கொண்ட வனக்குழு உள்ளது. வனக்குழு அமைப்பதற்கான விதிகளின் படி இந்த குழு முழுக்க முழுக்க வனத்துறை மற்றும் வனக்குழு தலைவர் என இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. சுமார் கடந்த 8 வருடங்களாக ஈஸ்வரன் இந்த வனக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில் சுமார் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வனத்துறை அலுவலகத்தில் இருந்து இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வனக்குழு தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறியதாக தெரிய வருகிறது . இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டம் இருப்பதாகவும் சமீபத்தில் கள்ளத்துப்பாக்கிகள் அதிகரித்துள்ளதாகவும் அதை வைத்து வன விலங்குகள் வேட்டை அதிக அளவில் வெள்ளகவி மலைகிராம பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இது வனத்துறைக்கும் தனக்கும் தெரியும் என்று கூறியது மட்டுமல்லாது இந்த விசயத்தில் காவல்துறையோ வனத்துறையோ உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டேனா என்றும் வினா எழுப்பியுள்ளார் .

மேலும் இதே பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரை கொலை செய்து விட்டதாகவும் அதில் TVP வைரவன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் ஆனால் வழக்கு பதிவு செய்யப்படாமல் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மீனாட்சிசுந்தரம் உடலை அடக்கம் செய்ததாகவும் அந்த விசயத்திலும் காவல்துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி உங்களை காப்பற்றினேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆடியோ வெளியானவுடன் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஈஸ்வரனை அழைத்து உரிய முறையில் விசாரித்து வனக்குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக வனத்துறையினர் கூறியதாலும், மது போதையில் இருந்ததாலும் இந்த ஆடியோ தவறுதலாக வெளியிட்டதாகவும் இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என்றும் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி வெள்ளகவி கிராம வனக்குழு தலைவர் பதவியில் தொடர்ந்து ஈஸ்வரன் நீடித்து வருவதாகவும் ஆனால் அவர் உள்ளூரில் தற்போது இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உண்மை வெளியில் தெரியவந்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயந்து ஈஸ்வரனை மிரட்டி இது போன்று எழுதி வாங்கியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை கூறுகின்றனர். அது மட்டுமல்லாது ஆடியோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் மத்திய மாநில உளவு அமைப்புகள் உரிய விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் வெளிவரலாம் என்றும் வனத்துறை மற்றும் காவல்துறையின் அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்றும் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button