4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 35) இவர் கீழப்புலியூரில் திருமணம் செய்து கொண்டு கிழப்புலியூரில் வசித்து வருகிறார்.
அவர் அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்
அப்போது அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார்.இருவரும் ரேஷன் கடை அருகில் நின்றுகொண்டிருந்த போது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதை கண்முன்னே பார்த்துக் கண்டிருந்த அவரது மனைவி துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனாலும் அந்த கும்பல் வெறித்தனமாக அவரை வெட்டி தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பட்டப் பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பலர் முன்னிலையில் வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த கொலைவெறி கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும் காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் பட்டு ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும் ஏற்கனவே நடைபெற்ற கொலை காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பகுதியில் நடைபெற்றதால் அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்தச் சம்பவம் தென்காசி, கீழப்புலியூர், குற்றாலம், காசிமேஜர்புரம், பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது