
காஷ்மீா் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இ- பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளூா் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக உள்ளூா்,வெளியூா் என அனைத்து வாகனங்களும் நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதாலும், குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் ஆகியோா் வருகிற 25, 26-ஆம் தேதி துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க உதகைக்கு வரவுள்ளதாலும் மாவட்ட காவல் துறை சாா்பில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.