
ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு நம் நாட்டில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு என்பது எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பாகும். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியாக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி உயிர்களை கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு பதிலடி கொடுக்க தயாராகி வருவது உறுதியாகி உள்ளது. இதனை அறிந்து பாகிஸ்தான் அலற தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்து கிடக்கிறது. ஆனால் நாம் ஒரே நாடு என்ற வகையில் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். இந்தியா ஒருவேளை தாக்கினாலோ அல்லது மிரட்டல் விடுத்தாலோ அனைவரும் பிஎம்எல் – என், பிபிபி, பிடிஐ, ஜேயூஐ மற்றவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கொடியின் கீழ் நாட்டை காக்க ஒன்றாக இணைய வேண்டும்” என்று கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து நம் நாடு தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ளது. இதனால் நடுங்கிப்போன பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் உசேன் அந்த நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது. இது இந்தியா மீதான பாகிஸ்தானுக்கு இருக்கும் பயத்தை காட்டும் வகையில் உள்ளது.
இதில் அவர் கூறியுள்ள பிஎம்எல்என் என்பது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியையும், பிபிபி என்பது பாகிஸ்தான் பிபிள் கட்சியையும், பிடிஐ என்பது முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியையும், ஜேயூஐ என்பதுஜாமியத் உலேமா இ இஸ்லாம் என்ற கட்சியையும் குறிக்கும். இந்த பதிவை செய்துள்ள சவுத்ரி பாவத் உசேன், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவர். இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அந்த நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக செயல்பட்டார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் குறித்தும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், ‛இந்திய அமைச்சரவையின் பாதுகாப்பு கூட்டம் முடிந்துவிட்டது. அமைதி மேலேங்கும் என்றும், ஊடகங்களால் தூண்டப்படும் போர் வெறிக்கு பணிந்து லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
இந்த 2 பதிவுகளில் முதல் பதிவில் பாகிஸ்தான் என்றும், 2வது பதிவில் பால்ஹம் என்ற ஹேஷ்டேக் மட்டுமே பதிவிட்டுள்ளார். பஹல்கம் பயங்கரவாத தாக்குதல் என்று அவர் கூறவில்லை. அதுமட்டுமின்றி ஊடகங்களால் தூண்டப்படும் போர்வெறிக்கு பணிந்து லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இப்படி வாய்ச்சவடால் விடும் அவரே இன்னொரு பதிவில் இந்தியா தாக்கினால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பீதியாகி உள்ளார்…