கோக்கு மாக்கு
Trending

வனப்பகுதியில் சினிமா படபிடிப்பு – வனத்துறையினரையே தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகம் , தாண்டிக்குடி வன பிரிவு – க்கு உட்பட்டது அரசன் கொடை கிராமம். தற்போது இந்த கிராமம் அசன் கொடை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் பழங்குடியினர் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது . தற்போது பல்வேறு காய்கள் தினமும் அறுவடை செய்து சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த பகுதி முழுவதும் யானைகள் , காட்டு மாடுகள், மலை அணில் இனங்கள் , மரநாய் , காட்டு பூனை என்று என்னற்ற அரிய வகை வன உயிரினங்கள் வாழ்த்து வருகின்றன. இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில் வனப்பகுதி நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதும் வேகமாக வறண்டு வரும் நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வன உயிரினங்கள் நடமாட தொடங்கியுள்ளன .

சித்தரேவு வனத்துறை சோதனை சாவடி

இந்த சூழ்நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய் மங்களம்கொம்பு மலை கிராமபகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார் .

ஜனநாயகன் படப்பிடிப்பு வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது . இந்த படப்பிடிப்பிற்காக மங்களம் கொம்பு தனியார் சொகுசு பங்களா முதல் படப்பிடிப்பு தளம் வரை பல்வேறு வாகனங்களில் படப்பிடிப்பு குழுவினர் தினமும் பல முறை வந்து செல்கின்றனர்.

படப்பிடிப்பு மற்றும் விஜய் -ன் பாதுகாப்பிற்காக தனியார் நிறுவனம் மூலம் பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே தடுப்பு ஏற்படுத்தி சாலைகளை யாருமே பயன்படுத்த முடியாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த மலைப்பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனக்குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு வனத்துறையால் 24 x 7 ரோந்து பணி மேற்கொள்ள வன ஊழியர்கள் உள்ளனர் .

நேற்று இப்பகுதி வழியாக ரோந்து சென்ற வனத்துறை ஊழியர் ரேவந்த் என்பவரை மறித்து அந்த வழியே செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளது வனத்துறை ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரோந்து பணி மேற்கொள்ள முடியாத நிலையில் அந்த பகுதியில் ஏதேனும் வனகுற்ற சம்பவங்கள் நடைபெற்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தபட்ட பகுதி வனபணியாளர்கள் தான் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்படுவர் என வனத்துறை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில் – வனத்துறை அதிகாரிகளின் முழு ஆசியுடன் இது போன்று வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடப்பதாகவும் , பழங்குடியினர் பகுதிகள் , பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த பல்வேறு துறைகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்ட விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் , இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் வன உயிரினங்கள் தான் பாதிக்கப்படும் என்றும் , இது கோடை கால காட்டு தீ உருவாகும் காலம் என்றும் கூறுகின்றனர் .

மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இவ்வளவு வாகனங்கள் , ஜனரேட்டர்கள் , அதிக சவுண்டு ஸ்பீக்கர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டது என்றும் , வனத் தீ ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் எதற்காக அனுமதித்துள்ளனர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே உடனடியாக படிப்பிடிப்பு குழுவினரை அப்புறப்படுத்திடவும் இனிமேல் இது போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்காமல் இருக்க தேவையாக அனைத்து வித நடவடிக்கைகளையும் சம்பந்தபட்ட அனைத்து துறை அதிகாரிகளும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button