
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றலா தளங்களில் முக்கியமான ஒன்று
இங்கு உள்ள இயற்கை மற்றும் குளிர்ச்சியை அனுபவித்து மகிழ பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இங்கு முக்கிய வணிகமாக குளிர் பிரதேச பகுதிகளில் மட்டுமே விளையும் பழங்கள் , காய்கறிகள் , தைல வகைகள் மற்றும் சாக்லெட் வகைகள் விற்பனை ஆகியவையாக உள்ளது.
இந்நிலையில் அடுக்கம் பகுதியில் உள்ள பழங்கள் மற்றும் சாக்லெட்கள் விற்பனை செய்யும் பிரபல கடை ஒன்றில் மரத்துண்டுகளை இரண்டு பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.
இது குறித்து விசாரித்த போது ஒரு பாட்டில் சந்தன கட்டைகளும் மற்றொரு பாட்டிலில் செம்மர கட்டைகளும் விற்பனைக்காக வைத்திருப்பதாக கடை ஊழியர்கள் கூறினர் . மேலும் சந்தன கட்டை துண்டுகள் ஒரு கிராம் பதினைந்து ரூபாய் விலையிலும் செம்மர கட்டை துண்டுகள் ஒரு கிராம் இருபது ரூபாய் விலையிலும் எடை போட்டு விற்பதாக கடை ஊழியர்கள் கூறினர்.
சந்தனம் , செம்மரம் போன்ற மரங்கள் வனச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இவற்றை வெட்டவோ , கையிருப்பு வைத்திருக்கவோ , விற்பனை செய்வதற்கோ கடும் தணிக்கைக்கு பின்னர் தான் அனுமதி வழங்கும் நடைமுறை மற்றும் விதிகள் உள்ள நிலையில் சாதாரணமாக கடைகளில் எப்படி கிடைக்கும் என எண்ணி உள்ளூர் கைடுகளிடம் இது குறித்து விசாரித்தோம் .
இது போன்று சந்தன செம்மர துண்டுகள் கொடைக்கானலில் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் எதற்கும் பில் போட்டு தரமாட்டார்கள் என்றும் இவர்களுக்கு இந்த சந்தன செம்மர கட்டைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் தெரியாது என்று தெரிவித்தனர் .
முக்கிய சுற்றுலா தலம் மட்டுமல்லாது வனத்துறையின் சோதனை சாவடி மற்றும் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள கொடைக்கானல் மலை பகுதி கடைகளில் சர்வ சாதாரணமாக சந்தன , செம்மர கட்டைகள் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.