
280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால் அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள் தூசி தடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உதவி ஆய்வாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 1095 நேரடி உதவி ஆய்வாளர்கள் (ஆண்- பெண்) பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து
கடந்த 15 ஆண்டுகளாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 என உயர்த்தியதாலும், காவல் துறையில் ஏற்பட்ட சில நிர்வாக குறைபாடுகளாலும் பதவி உயர்வில் சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதனை கவனத்தில் கொண்ட அரசும், காவல் துறை நிர்வாகமும் காவல் உதவி ஆய்வாளர் (SI) நிலையில் உள்ள 280 பேரை காவல் ஆய்வாளர் (Inspector) நிலைக்கு மாற்ற முடிவுச் செய்தது.
பல கட்ட முயற்சிக்கு
பின்பு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 27வது அறிவிப்பாக “சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும், அன்றாட அவசர நிலைகளை கையாளவும் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையிலும் 280 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும். இதன் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சட்டம் ஒழுங்கு ,சாதி வகுப்புவாத பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும்” என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்புடன் வெளியான காவலர்கள் பதவி உயர்வு, மகளிர் காவலர்கள் திருமணத்திற்கு பணம் வழங்குவது போன்ற சில அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு அவை செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. ஆனால் 280 உதவி ஆய்வாளர் பணியிடம் உருவாக்கம் செய்யும் அரசாணை மட்டும் முதலமைச்சர் அறிவித்த 2 மாதங்களாகியும் காவல்துறை தலைமை அலுவலக நாற்காலியில் கேப்பாரற்று தூங்கி கொண்டிருக்கிறது.
உதவி காவல் ஆய்வாளர் பதவி உயர்வு குறித்து அனுப்பப்பட்ட மனுக்களுக்கு ஒப்புதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்பாட்டில் ஏதும் நடக்கவில்லை. பதவி உயர்வு வந்து விடும் என்று நம்பிக்கையாக இருந்த உதவி ஆய்வாளர்கள், அரசாணை வராத்தால் சேர்வடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பதவி உயர்வு வரும் சமயத்தில் ஏதாவது தண்டனை வழங்கப்பட்டால் பதவி உயர்வு வழங்கப்படாது என்பது விதியாக இருப்பதால் அரசாணை வழங்க உள்துறை செயலகமும், காவல் துறை உயரதிகாரிகளும் தயாராக இருந்த போதும் காவல் துறை தலைமை அலுவலக பணியாளர்களின் மெத்தனத்தால் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நமக்கு ஏன் வம்பு, தண்டனை வந்து விட்டால் என்ன செய்வது என்று உதவி ஆய்வாளர்கள் வாய் திறக்க யோசிக்கின்றனர்.
இன்று நடைபெறும் சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்குமா? என ஏக்கத்தில் நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர். காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வில் இருக்கும் அதிகாதிகளின் மெத்தனப்போக்கு கவனத்திற்கு செல்லுமா? என்பதே கேள்வியாக உள்ளது.