



திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கருங்குளத்தில் பத்துக்கு மேற்பட்ட லாரி மட்டும் ஜேசிபி வைத்து மண் அள்ளி வருகின்றனர்.
இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியவில்லை என்றும் கூறி அந்த பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இன்று மண் அள்ளிச் சென்ற லாரியை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறிய போது மாவட்ட ஆட்சியர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக குளத்தில் மண் அள்ள கொடுத்த அனுமதியை தவறாக பயன்படுத்தி தனியார் தோட்டத்திற்கு மண் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதனையடுத்து எரியோடு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் மண் அள்ளிய வாகனத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.