
கே.டி.சி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகேயுள்ள கே.டி.சி நகரில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கவின் குமார் என்பவர் காதல் விவகாரம் தொடர்பாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகரின் மகனான கவின் குமார், கே.டி.சி நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த காதல் விவகாரம் தொடர்பாகவே இவரை மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், கவின் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த இக்கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.