
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் குளிர்ச்சியான , இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாக உள்ளது சிறுமலை மலை பகுதி.


இந்த சிறுமலை பகுதிகளில் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் , வனக்காடுகளாகவும் உள்ளன மீதம் உள்ள பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமாக உள்ளது . இங்கு சில வருடங்களுக்கு முன்பு வரை விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வந்தது . இங்கு விளையும் பலா மற்றும் வாழை பழங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது . மேலும் இங்கு விளையும் சௌ சௌ , அவரை , பீன்ஸ் , மிளகு மற்றும் முந்திரி ஆகியவற்றுக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வளவு வளமான சிறுமலை மலை பகுதி சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக சில பணத்தாசை பிடித்த நபர்களின் ஆசையால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா விவசாய நிலங்கள் மபெரும்பகுதி காட்டேஜ்களாகவும் , தனியார் விளையாட்டு பூங்காக்களாகவும் மாற்றப்பட்டு இயற்கை தன் அழகினை க இழந்து வருகிறது.

வனத்துறை பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் பல்லுயிர் பூங்கா இன்னும் காட்சி பொருளாக மட்டுமே உள்ள நிலையில் தனியார் பூங்காக்களில் பல்வேறு அட்வென்சர் வகையிலான விளையாட்டு மற்றும் நடந்து செல்லும் வகையில் அமைத்து சுற்றுலா பயணிகள் வருகையால் வசூல் மழையில் நனைந்து வருகின்றனர். இ

இங்கு உள்ள தட்ப வெட்ப நிலை மற்றும் குறைந்த செலவு சுற்றுலா பகுதியாகவும் சிறுமலை மாறியுள்ளதால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது . இவர்கள் செல்லும் போது விட்டுச் செல்லும் நெகிழி கழிவுகள் அப்புறபடுத்துதல் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க தேவையான நிதி ஆதாரத்திற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறுமலை ஊராட்சி மற்றும் சிறுமலை வனசரகம் இருவருக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சுற்றச் சூழல் மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டு சிறுமலை வன சோதனை சாவடியில் வாகன கட்டண வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடம் உருவாக்க பணிகளில் ஈடுபட்ட சில உள்ளூர் மக்கள் தங்களது பட்டா நிலங்களில் வீடுகளாக கட்டி மின் இணைப்பும் பெற்று அதனை சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளாக வாடகைக்கு விட்டு பணம் பார்த்து வந்தனர் . இதனை கண்ட சில பண முதலைகள் தங்களிடம் உள்ள கருபபு பணத்தை இங்கு கொட்டி பெரிய பெரிய சொகுசு விடுதிகள் , மீட்டிங் ஹால் , பார்ட்டி ஹால், DJ மீயூசிக் உடன் இரவு நேர கேளிக்கைகள் என கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களை மிஞ்சும் வகையில் தொழில் கொடிகட்டி பறக்கிறது .

இந்த சொகுசு விடுதிகள் , தனியார் பூங்காக்கள் உட்பட எதற்குமே உரிய அனுமதி பெறப்படவில்லை . இத்தனைக்கும் இந்த சிறுமலை மலை பகுதி முழுவதும் தமிழ்நாடு மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளது. இங்கு எந்த ஒரு சிறு பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும் தமிழ்நாடு மலைகள் பாதுகாப்பு ஆணையம் (HACA கமிட்டி ) ஒப்புதல் பெற்ற பின்னரே செய்ய வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் அனுமதி இல்லாமல் செய்யப்படும் கட்டிட பணிகள் , வேலி அமைத்தல் , அரசு மற்றும் வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு நிலங்கள் விற்பனை என வியாபாரம் படு அபாரம் என்கின்றனர் உள்ளூர் மக்கள் .

இத்தனைக்கும் சிறுமலைக்கு என வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரி இருக்கிறார் , உள்ளாட்சி அமைப்பிற்கு என சிறுமலை ஊராட்சி செயலாளர் இருக்கிறார் , வனதுறைக்கு வனவர் தலைமையில் வனகாப்பாளர்கள் , வன கண்காணிப்பாளர்கள் உள்ளனர் . சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி ஒன்றும் உள்ளது . இவ்வளவு இருந்தும் சமீபத்தில் தனியார் காட்டேஜ் பகுதி ஒன்றில் பல மரங்கள் வெட்டப்பட்டு அங்கேயே அறுவை இயந்திரம் கொண்டு வெட்டி பலகைகளாக மாற்றி கட்டுமான பணிக்காக அடுக்கி வைத்துள்ளனர்.

இவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்த பிரத்தியேக அடுப்பு வைத்து கழிவுகளை சாம்பலாக்கி வருகின்றனர்.

கட்டுமானப்பணி மேற்கொள்ள தேவையான கற்களை அனுமதியின்றி அங்குள்ள பாறைகளை உடைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

உடைத்து எடுக்கப்பட்ட பாறைகள் மற்றும் வனசோதனை சாவடி வழியாக கொண்டு வரப்படும் கட்டுமான பொருட்களை கொண்டு அடுக்குமாடி விடுதிகள் மற்றும் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்கள் சிறு உதாரணம் மட்டுமே . சிறுமலை மலை பகுதி முழுவதும் சட்டவிரோத விடுதிகள் மற்றும் கட்டுமானங்கள் 500 -க்கும் மேல் இருக்கும் என்றும் இவற்றில் பலவற்றிற்கு வீட்டு மின் இணைப்பு பெறப்பட்டு விடுதிகளாக பயன்பாட்டில் உள்ளதாகவும் , நீர் தேவைகளுக்காக அனுமதியற்ற போர்வெல்கள் மற்றும் நீரோடைகளில் இருந்து மோட்டர் மூலம் நீர் திருட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இது போன்ற சட்ட விதி மீறல்களை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தர நியமிக்கப்பட்ட வருவாய் துறையின் கிராம நிர்வாக அதிகாரி , உள்ளாட்சி அமைப்பின் சிறுமலை ஊராட்சி செயலாளர் , வனத்துறையின் வனவர் தலைமையில் வன காப்பாளர்கள் , வன கண்காணிப்பாளர்கள் கனிமவள துறையினர் , மாசு கட்டுப்பாட்டு துறையினர் மற்றும் இன்ன பிற தொடர்புடைய துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.