
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவல் உறுதி செய்யப்பட்டததை அடுத்து கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து போளூர் பகுதி முழுவதையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அப்போது போளூர் பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர் . அவர்கள் கையில் வைத்திருந்த பையில் அரியவகை நட்சத்திர ஆமைகள் இரண்டு இருந்ததை சோதனையின் போது கண்டுபிடித்ததை அடுத்து மூவரையும் இரண்டு நட்சத்திர ஆமைகளுடன் போளூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் போளூர் வனச்சரக அதிகாரிகள் நட்சத்திர ஆமைகள் எப்படி கிடைத்தது என்றும் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.