
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி முழுவதும் மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (HACA COMMITTEE) கண்காணிப்பு பட்டியலில் உள்ள பகுதி ஆகும் .

இங்கு எந்தவித பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய உத்தரவு பெற்ற பின்னர் தான் மேற்கொள்ள வேண்டும் என்று விதிகள் உள்ளன . இவற்றை கண்காணிக்க மாவட்ட அளவிலான மலைபகுதி பாதுகாப்புகுழு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் உள்ளது . இந்த குழுவில் வனத்துறை , கனிம வளத்துறை , மாசுகட்டுப்பாட்டு வாரியம் , வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்று அவ்வபோது கூடி மலைகள் பாதுகாப்பு தொடர்பான மற்றும் அப்பகுதியில் அரசு , தனியார் நிலங்களில் நடைபெறக்கூடிய பணிகள் குறித்து பரிந்துரைகளை மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைத்து அதன் மீது மாநில மலைகள் பாதுகப்பு ஆணையம் தேவையான உத்தரவுகளை பிறப்பித்த பின்னர் உரிய விதிகளின் படி சம்மந்தபட்ட பணி முடியும் வரை கண்காணிப்பது வழக்கம்.
தற்போது சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை பகுதிகளில் தனியார் நிலங்களில் மரங்களை வெட்ட சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட மலைப்பகுதி பாதுகாப்புகுழு அனுமதி அளித்துள்ளது.

தெளிவாக கூற வேண்டும் என்றால் தனியார் நில உரிமையாளர் தனது பட்டா சிட்டா அடங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து என்ன வகையான மரங்கள் எத்தனை எண்ணிக்கை எதற்காக வெட்ட அனுமதி வேண்டும் என அனைத்து விபரங்களுடன் மாவட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழு அல்லது மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையம் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும் . அதன் பின்னர் மாவட்ட அளவிலான குழுவினர் வெட்ட அனுமதி வழங்க இருக்கும் மரங்களுக்கு குறியீடு செய்து ஒவ்வொரு மரமும் எத்தனை கன அடி மற்றும் உயரம் உட்பட முழு தரவுகளுடன் உரிய அலுவலங்களுக்கு அனுப்பி வைப்பர் . அதன் பின்னர் மரங்களை வெட்ட அனுமதி கடிதம் மற்றும் விதிமுறைகள் (அதாவது ஒரு மரத்திற்கு பதிலாக அதே வகை மரங்கள் எத்தனை எண்ணிக்கையில் நட்டு வளர்க்க வேண்டும் என்பது உட்பட ) வகுக்கப்பட்டு உத்தரவு வழங்கப்படும் .

இதற்கு என ஒரு தொகை பாதுகாப்பு தொகையாக DD முறையில் தனியார் நில உரிமையாளர் வழங்கியிருப்பார். விதிகளின் படி அனைத்து நடைமுறைகளும் முடிந்து மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தபட்ட பின்னர் மீண்டும் குழு ஆய்வு செய்து எந்தவித விதி மீறலும் இல்லை என சான்றளிக்கப்பட்டால் மட்டுமே பாதுகாப்பு தொகை திருப்பி வழங்கப்படும். இதற்கிடையில் வெட்டப்பட்ட மரங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் தனியாக அனுமதி பெற வேண்டும் . இந்த அனுமதி மாவட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழு சேர்ந்து முடிவெடுத்து வழங்கும்.

சிறுமலையில் கடந்த கோவிட் – 19 லாக்டவுன் காலத்திற்கு முன்பு (ஓகி புயல் வீசியது முதல் ) முதல் தற்போது வரை பல ஆயிரம் மரங்கள் வெட்டி திண்டுக்கல் மற்றும் வெளியூர் மர மில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு சில மரக்கன்றுகள் நட்டதோடு சரி ஒரு field-ல் கூட முழு விதிமுறைகளை கடைபிடிக்கவே இல்லை. தற்போது கூட சிறுமலை அகஸ்தியர் புரம் வெள்ளிமலை கோவில் அடிவாரம் (இந்த அகஸ்தியர்புரம் பகுதி முழுவதும் வனக்காப்பு காடு ஆகும்) பகுதியில் நம்பர் போடப்படாத (அ) விதிகளின் படி குறியீடு இல்லாத (குறியீடு இல்லை எனில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட என கூறப்படும் ) மரங்கள் சிறு சிறு லோடுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து கணபதி என்னும் மரவியாபாரி கொண்டு வந்து சேமித்து வருகிறார். குறிப்பிட்ட சர்வே என் மட்டுமின்றி வேறு பகுதியிலும் மரங்கள் வெட்டி கொண்டு வந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குவித்து வைத்து பின்னர் இங்கிருந்து மொத்தமாக மர அறுவை மில்களுக்கு அனுப்பி வைக்கின்றார் .
இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழுவினர் , வனத்துறையினர் , வருவாய் துறையினர் உட்பட அனைத்து துறையினரும் எந்தவித கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளாமல் மரக்கடத்தலுக்கு மறைமுகமாக உதவி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இதே போன்று தனியார் காட்டேஜ் பகுதியில் மரங்களை வெட்டி அங்கேயே பலகைகளாக அறுத்து அடுக்கி வைத்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தற்போது வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடு மார வியாபாரிகளின் மரத்தை வெட்டி குவித்து வைக்கும் குடோனாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய , மாநில அளவிலான சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் சிறுமலை மலை பகுதியில் நேரடி கள ஆய்வு செய்து சட்டவிரோத மர கடத்தல் கும்பல் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனம் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களை காக்க முடியும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மலைக்காடுகளை காக்க முடியும் என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.