
நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபரமாபுரம் ஊராட்சியில் நான்கு வழி சாலை பணிக்காக சின்னேரியில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதிள்ளனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர்.
கிராம பகுதியில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதுடன், நீர்மட்டமும் ஆழத்திற்கு சென்றுவிடும் என கூறி வருகின்றனர். இந்த சூழலில், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மணல் குவாரி அமைக்க போலீசாரின் பாதுகாப்புடன் மண் அள்ளும் பணியில் மணல் குவாரி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் குவாரி அமைக்க கூடாது என ஊர்வலமாக சென்றனர்.
இதற்கிடையே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடித்த ஒருங்கிணைப்பாளரை வீடு புகுந்து போலீசார் கைது செய்ததாக கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செருதுர் கிராமத்தில் இருந்து பேரணியாக சென்று கிழக்கு கடற்கரை சாலையில் பிரதாபராமபுரம் கைகாட்டி பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வராததால் வேளாங்கண்ணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண் குவாரி அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ள பொதுமக்களிடம் கோட்டாட்சியர் அரகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ்வழியாக வந்த கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷண்ன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.