
நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் யானை உலாவி வருவதால் வனத்துறை கண்காணித்து வருகிறது.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக உலவி வரும் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அது தோட்டத் தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், ஓவேலி வனச் சரக அலுவலர் வீரமணி தலைமையிலான வன ஊழியர்கள் அந்த யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
யானையின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதுமலை புலிகள் காப்பக வளர் முகாமில் இருந்து விஜய், வாசிம் எனும் இரண்டு கும்கி யானைகளும் அழைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு முடிவின் பின்னர், அந்த யானையைப் பிடிப்பது தொடர்பாக வனத்துறை முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளது.