
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பயணியிடம் மிரட்டல் விடுத்து தங்க நகை பறித்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே கண்டியப்பேரியைச் சேர்ந்த பொன்செல்வம் என்பவர் செப்டம்பர் 8ஆம் தேதி இரவு சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார் . அப்பொது அங்கு வந்த இருவர் கொலை மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்த தங்க மோதிரம் மற்றும் செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து பொன்செல்வம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவை சேர்ந்த செந்தட்டி காளை மகன் தேவநேசன்(28) மற்றும் சங்குபுரம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம்(21) என்பதும் உறுதி செய்யப்பட்டது .
அவர்களிடமிருந்து 14 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.