
ஆபீஸ்/கடை போட்டு லாட்டரி விற்பனை – தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதிரடி காட்டும் காவல்துறை லாட்டரி விற்பனையை கண்டுகொள்ளாதது ஏன்???
தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் குற்ற சம்பவங்களை ஒடுக்கும் பொருட்டு அனைத்து வகை குற்றங்களையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட திண்டுக்கல் நகர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்கள் சட்டவிரோத மது விற்பனை நடைபெறும் இடங்களை சாதாரண உடையில் சென்று ஆய்வு செய்து நூற்றுக்கணக்கில் மதுபாட்டில்களை கைப்பற்றி சட்டவிரோத மது விற்பனையில் விற்பனையில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டினார்
அதுபோல இதர சட்டவிரோத செயல்பாடுகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல் துறையினர் கூலி வேலைக்கு செல்லும் நபர்களின் பணத்தை சுரண்டி தின்னும் லாட்டரி மாபியாக்கள் கண்ணில் படவில்லையா என கேள்வி எழுந்துள்ளது
திண்டுக்கல் நகர் மைய பகுதி மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்ட அரசு மருத்துவமனையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ள 108 விநாயகர் கோவில் எதிரே உள்ள சந்தில் உள்ள பழைய கட்டிடத்தில் லாட்டரி மாபியா கும்பல் செயல்படுவதாக நமது செய்தி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்ததனை அடுத்து லாட்டரி வாங்குவது போல உள்ளே சென்ற எங்களுக்கு தலை சுற்றும் அளவில் மிக பிரம்மாண்டமாக டேபிள் செர் போட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவன அலுவலகம் போல் மிக பரபரப்பாக இயங்கி வருவதை நேரடியாக பார்த்தோம்
இங்கு ஒரு நம்பர் முதல் ஆறு நம்பர் வரை பல்வேறு வகைகளில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் அவர்கள் கூறும் நம்பரை பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தனியாக இயந்திரம் ஒன்றை வைத்து கைடெக் முறையில் லாட்டரி எண்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் கொண்டு ரசீது வழங்க பல நபர்கள் ஒவ்வொரு அறையிலும் மிஷின் மற்றும் அலைபேசியுடன் அமர்ந்து அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கேட்கும் எண் மற்றும் சீரியல் அடித்து ரசீது கொடுக்கின்றனர்
இதுகுறித்து மேலும் தகவல் சேகரிக்க விசாரணையில் இறங்கியபோது நகர்ப்பகுதி முழுவதும் இதுபோல சுமார் பத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத லாட்டரி விற்பனை அலுவலகங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இயங்கி வருவதாகவும் இதுவரை இவர்கள் பிடிபடாமல் இவ்வளவு ஓப்பனாக அலுவலகம் அமைத்து இயந்திரங்களை கொண்டு நவீன முறையில் தினமும் திண்டுக்கல் நகர் பகுதியில் மட்டும் பல லட்ச ருபாய் கல்லாகட்டுவதாகவும் மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சில பல கோடிகள் விற்பனை நடப்பதாகவும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்
ஒரு மாவட்டத்தில் மட்டும் தினமும் பல கோடி ரூபாய் பணம் புரளும் இந்த சட்டவிரோத லாட்டரியால் கிடைக்கும் பணம் முழுவதும் யார் யாருக்கு செல்கின்றது என்ற விபரங்களை கண்டுபிடித்து மொத்த சட்ட விரோத லாட்டரி கும்பலையும் கைதுசெய்து அதிரடி காட்டுமா திண்டுக்கல் மாவட்ட காவல் துறை