
நேற்று காணாமல் போன 4 இளைஞர்களில் இன்று காலை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிரிழப்பதற்கு முன் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேல் தளையூத்து அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவத்தில், இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அவர்கள் உற்சாகமாக அருவிக்குச் சென்ற கடைசி வீடியோ வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றிச் சென்றபோது, ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பாரூக் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் மூழ்கினர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற இருவரைத் தேடும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, அதுதான் தங்களின் கடைசிப் பயணம் எனத் தெரியாமல் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
