
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிறப்பு நூலகம் ஒன்று இயங்கி வருகிறது இந்த நூலகமானது தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிறப்பு நூலகம் ஆகும் இதில் பல மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் மற்றும் பலதரப்பட்ட வாசகர்களும் பயன்பெற்று வந்தனர்.

இந்த கட்டிடமானது கடந்த 04/04/2023 அன்று தான் அப்போதைய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி , உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் IAS தலைமையிலும் அப்போதைய மருத்துவ கல்லூரி இயக்குனர் ஆர். சாந்தமலர் முன்னிலையிலும் திறந்து வைத்தனர்
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (GH) வளாகத்தில் கீழ் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டிடம், தரமற்ற கட்டுமானத்தால் பழுதடைந்த நிலையில் உள்ளது. நேற்று (சனிக்கிழமை- 04/04/2026) மதியம் திடீரென பெய்த மழையில் நூலகத்தின் மேற்கூரை பகுதியிலிருந்து மழைநீர் அருவி போல் உள்ளே கொட்டியதால் நூலகத்தில் படிக்க வந்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் வேதனை அடைந்தனர்.
நூலகத்திற்கு நேற்றும் இன்றும் படிக்கச் சென்ற பொதுமக்களில் ஒருவர் தெரிவித்ததாவது: நூலகத்தில் மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. நேற்று (04/04/2026 ) மாலை திடீரென்று மழை பெய்தபோது, மேற்கூரை பகுதியிலிருந்து மழைநீர் அருவி போல் கொட்டியது. நூலகம் முழுவதும் மழைநீர் பரவியதால், உட்கார்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. புத்தகங்கள், நாளிதழ்கள், கம்ப்யூட்டர் போன்றவை பாதுகாப்பின்றி சேதமடைந்து உள்ளன. இந்தக் கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற பயத்துடனேயே நூலகத்திற்கு வருகிறோம் என்றார்.
இந்த நிலையில், நூலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி மழைநீரால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், நூலகத்திற்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நூலகக் கட்டிடத்தை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, கட்டிடத்தை பராமரிப்பு செய்யவும், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பொதுமக்கள் பயமின்றி நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.