கரூர் மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படுகின்றன – முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது – தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும் – பேருந்துநிலையத்தில் ஆய்வு செய்த பிறகு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தகவல்
இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்து சேவை துவக்கப்பட்டதையடுத்து கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுவதை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாவட்டங்களுக்கிடையே இயக்கப்பட்ட பேருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அனைத்துப் பேருந்துகளிலும் கைகளை சுத்தம் செய்யும் திரவம் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்ஷீல்டு எனப்படும் முகத்தை பாதுகாக்கும் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேருந்தில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துநர்கள் மூலம் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கப்படுகின்றது.
பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறையின் அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளிவல் இயக்கப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா கரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் போக்குவரத்துத்துறை மண்டல மேலாளர் திரு.குணசேகனர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
எஸ்.கண்ணன்