நேற்று இரவிலிருந்து ஆடியோ ஒன்றை திட்டமிட்டே ஒரு சமூகவிரோதக் கும்பல் பரப்பி வருகிறது. அதில் விடுதலைச்சிறுத்தைகள் ஒரு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டுகிறார் பாருங்கள் என குறிப்பு போட்டு பரப்பி வருகிறார்கள். ஆடியோவில் பணம் கேட்டு மிரட்டும் அந்த உரையாடலில் எங்குமே விடுதலைச்சிறுத்தைகள் என்று யாருமே சொல்லவில்லை. அப்படி இருந்தும் விடுதலைச்சிறுத்தைகள் என்று சமூகவிரோதிகள் பகிர்கிறார்கள். அதை சரிவர விசாரிக்காமல் ஊடகத்தினரும் பரப்பி வருவது தான் வேதனை அளிக்கிறது. அவதூறுகளும் பொய்களும் உண்மையை விட வேகமாக பரவிவருகிறது. இச்சூழலில் உண்மையை கண்டறிய எமது மாவட்டச்செயலாளர் திரு.தமிழரசன் அவர்கள் சம்மந்தப்பட்ட ஓட்டேரி (செங்கல்பட்டு மாவட்டம்) காவல்நிலைய ஆய்வாளரிடம் பேசி விளக்கம் கேட்டுள்ளார். ஆய்வாளரும் மறுத்துள்ளார். பணம் கேட்டு மிரட்டுபவன் ஒரு ரவுடி என்றும் தேடி வருவதாகவும் இன்ஸ்பெக்டர் சொல்லி உள்ளார். மேலும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலும் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். எந்த உண்மையும் இல்லாமல் பொய்யை மட்டுமே பரப்பி விடுதலைச்சிறுத்தைகள் மீது அவதூறு பரப்பி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாத கோழக்கும்பல் இப்படி அவதூறு பரப்புவதன் மூலம் விடுதலைச்சிறுத்தைகளின் சனாதன எதிர்ப்பை தடுக்கலாம் என நினைக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் தந்தை பெரியார் வழியில் சமரசமில்லாமல் போராடிவரும் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம். ஊடகவியலாளர்கள் இச்செய்தியை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்! – வன்னி அரசு துனைப்பொதுச்செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள்