கரூர் மாவட்ட திமுக சார்பில் அண்ணா, பெரியார் பிறந்த நாட்கள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மற்றும் கட்சி முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் தனியார் திருமண மண்டபத்தில் காணொலி காட்சி வாயிலாக (ஜூம்) நடைபெற்றது.
சென்னை அறிவாலயத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று கட்சி முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழிகள் வழங்குவதாக அறிவிக்க அவர் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி, குளித்தலை எம்எல்ஏ ராமர், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் கே,மணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் மணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ.10,000 மதிப்புள்ள பொற்கிழிகளை வழங்கினர்.
திமுக சார்பில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று (செப். 28ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப.வீரபாண்டியன், 3 வேளாண் சட்டங்கள், அதில் உள்ள சீர்கேடுகள், அதனை மாநிலங்களவையில் முறையாக நிறைவேற்றப்படாதது குறித்தும் இதற்கான போராட்டம் குறித்து காணொலி மூலம் விளக்கினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது :
திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளைப் பொறுத்தவரை கோடு போட்டுக் காட்டினாலே ரோடு போடக் கூடியவர்கள் என்பதற்கு உதாரணம் தான், கரூர் மாவட்டத்தில் நடைபெறக் கூடிய இந்த முப்பெரும் விழா.
கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளரான செயல்வீரர் செந்தில் பாலாஜி அவர்கள், காணொலி மூலமாகவே முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.
530-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இதேபோன்ற கூட்டங்களை மற்ற மாவட்டக் கழகங்களும் நடத்துவதற்கான பாதையைக் கரூர் மாவட்டக் கழகம் தொடங்கி வைத்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் கூட்டங்கள் நடத்த இயலாது என்பது ஒருபக்கம் இருந்தாலும் – தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி இத்தகைய கூட்டங்களை நாம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர்.