தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கான ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கப்பட்டன. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளியை சற்றும் பின்பற்றாமல் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு விழாவில் இதுபோன்று தனி மனித இடைவெளி காற்றில் கறைந்ததாலும், பொதுமக்களுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசு அதிகாரிகளே இது போன்று நடந்து கொண்டதாலும் பொதுமக்களும் நோயாளிகளும் அச்சத்திலும் பெரும் அதிருப்தியிலும் உள்ளனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு தனி மனித இடைவெளி இன்றி விற்பனையில் ஈடுபட்டதாக கூறி சங்கரன்கோவிலில் உள்ள தேநீர் விடுதிக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.