தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் குடும்ப தகராறில் மனைவி கொடுரமாக வெட்டி கொலை, கணவன் கைது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பேபி ரம்யா. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவர்களுக்கு உதயா, ஆசாத் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பேபி ரம்யா வீட்டை விட்டு வெளியேறி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதை அறிந்த கணவர் மாரியப்பன் தன்னுடன் வந்துவிடுமாறு கூறி மனைவியை அழைத்து வந்து மீண்டும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்படவே பேபி ரம்யா மீண்டும் தேவி பட்டணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பேபி ரம்யாவை அழைக்க மறுபடியும் மாரியப்பன் இன்று மாலை தேவிபட்டிணத்திற்க்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்ப்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அருகில் இருந்த அரிவாளால் சரமாரியாக பேபி ரம்யாவை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த பேபி ரம்யா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிவகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த மாரியப்பனை கைது செய்துள்ளனர். மனைவி பேபி ரம்யா அடிக்கடி செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் மாரியப்பன் மற்றும் பேபி ரம்யாவிற்கும் இடையோ அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் தன் மனைவியை கொலை செய்திருப்பதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.