ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீர பத்ர சிங் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.
9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 6 முறை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.
அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இவர், இந்திராகாந்தி காலம் தொடங்கி ராகுல் வரை காங்கிரஸ் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர்.
இதனிடையே 1962, 1967, 1971, 1982, 2009 என 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கொடி ஓங்கிப் பறக்கும் வகையில் சாணக்யத்தனத்துடன் அரசியல் செய்தவர் வீர பத்ர சிங்.
87 வயதாகும் வீர பத்ர சிங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் உடல்நலக் குறைவு காரணமாக சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாத காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த திங்கள்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.