தூத்துக்குடியில் போலீசார் நடத்திய சோதனையில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டவுண் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, தலைமைக் காவலர்கள் ஜீசஸ் ரோசாரி, சிலம்பரசன், ஆனந்த ஆகியோர் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குடோனில் சோதனையிட்டபோது 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் கனகசபாபதி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், டூவிபுரம் 2வது தெருவில் ஒரு வீட்டில் சோதனையிட்டபோது 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, இராதாகிருஷ்ணன் மகன் காளியப்பன் (34), என்பவரை கைது செய்தனர். மேலும், சங்கரப்பேரியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டு அங்கு 5 கிலோ கஞ்சாவை பறிதுதல் செய்து பால்சாமி மகன் ஜெயராம் (32) என்பவரை கைது செய்தனர். தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.