செய்திகள்டிரெண்டிங்
Trending

மின்சாரம் பாய்ந்து நாகை மின் ஊழியர் உயிரிழப்பு – மின்சார வாரிய அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சபரி கிருஷ்ணன் வயது 27. இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் மின்சார வாரியத்தில் கேங்மேன் ஆக பணியில் சேர்ந்தார். வேளாங்கண்ணி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சபரி கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று மாலை நாகையை அடுத்த பறவை – வடவூர் சாலையில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மின் கம்பத்தில் கருவை மரம் உரசியதால் மின்தடை ஏற்பட்டதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உயர்மின் வழிப்பாதையில் மின்சாரத்தை நிறுத்தாமல் மரத்தை அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சபரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அருகில் இருந்த ஊழியர்கள் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சபரி கிருஷ்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இன்று கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் சபரி கிருஷ்ணனின் உறவினர்கள் அலட்சியமாக செயல்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இறந்த சபரி கிருஷ்ணனுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரியும் நாகை மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாகை மேற்பார்வை பொறியாளர் பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். உயிரிழந்த சபரி கிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தநிலையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் காரணமாக நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button