செய்திகள்

மேகதாது அணை பிரச்சனை அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

மேகதாது அணை பிரச்சினை மீண்டும் வெடித்துக் கிளம்பும் நிலையில் அதுகுறித்து மத்திய அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து தமிழக நிலை குறித்து விளக்கினார். இந்நிலையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில், ஜூலை 12ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button