தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வந்த விசைப்படகுகளில் 3 விசைப்படகுகள் தருவைகுளம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீன்பிடி தொழில் செய்யாமல் முறைகேடாக தருவைகுளத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இரு ஊர் மீனவர்களுக்கும் இடையே பனிப்போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மீனவர்களுக்கு இடையே நிகழும் இந்த அசாதாரண சூழ்நிலை நிவர்த்தி செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் இன்று காலை திடீரென தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அணையும் தளம் விரிவாக்கம் பணிகளையும் அதற்கு வகுக்கப்பட்டுள்ள திட்ட வரைபடங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து படகு தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய அவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் விரிவாக்கும் அமைக்கப்பட உள்ள இடம் குறித்தும் மீனவர்களுக்கு அதில் செய்து தர வேண்டிய வசதிகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.